எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர். பின்னர் கீதாஜீவன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



தஞ்சையில் நடைபெற்ற மேகதாது அணைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி சார்பில் தஞ்சாவூரில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை இல்லத்திற்கு சென்ற தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து விசாரணைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், தமிழக வெற்றிக் கழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து திமுகவினர் முழக்கமிட்டனர்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கீதாஜீவன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், "தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பேச்சுரிமையை பறித்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையில் செயல்படுகிறது. நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை சட்டமன்றத்தில் பேசவிடாமல் தடுக்கவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



காவல்துறை ஆளுங்கட்சியின் கருவியாக செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. தமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்," என்றார்.