முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும், அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தாக்கல் செய்த மனுவையும் தூத்துக்குடி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்து சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்நிலையில், மார்க்கண்டேயன் தரப்பில் ஜாமீன் கோரியும், காவல்துறை தரப்பில் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தன.‌ விசாரணையின்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீதேவி மற்றும் மார்க்கண்டேயன் தரப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காசிராஜன் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, ஜாமீன் மனுவையும் காவல் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



இதையடுத்து, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீண்டும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கு விசாரணையையொட்டி நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டிருந்தனர்.