தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட முத்தையாபுரம் பல்க் பேருந்து நிறுத்தம் ஜங்ஷன் அருகே செயல்பட்டு வரும் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் கடந்த ஆறு மாதங்களாக மருத்துவர் இல்லாததால், அப்பகுதி மக்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.



இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும், முள்ளக்காடு மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்களை நியமித்து, மருந்து, மாத்திரை மற்றும் ஊசி தட்டுப்பாடு இல்லாமல் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மணிகண்டன், ஜெரினா பானு, விக்டோரியா, மைக்கேல் ராஜ், அருள்தாஸ், சுடலைமாடன் மற்றும் வேலம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை மனுவைத் தொடர்ந்து சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. அதன் விளைவாக, முத்தையாபுரம் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் மருத்துவர் நியமிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு தொடர்ந்து மருத்துவ சேவையும் தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.



மேலும், முள்ளக்காடு மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மருந்து, மாத்திரை மற்றும் ஊசி தட்டுப்பாடு நீக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, மருத்துவர் நியமனம் மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் ஆகியோருக்கு சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.