தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை நீண்டகாலமாக செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.



மாநகராட்சியில் 2025–26 ஆம் ஆண்டு வரையிலான (31.03.2026 வரை) சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பிற வரிகளை செலுத்தாத வரி விதிப்புதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள்மீது குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின்படியும், கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுறுத்தலின்படியும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 24, 29, 38, 39 மற்றும் 41 ஆகிய வார்டுகளில் உள்ள வடக்கு ரதவீதி, சந்தை ரோடு, மீனாட்சிபுரம் மேற்கு, பாளையங்கோட்டை ரோடு மற்றும் குரூஸ்புரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



அதில், 2022–23 முதல் 2025–26 வரையிலான காலப்பகுதிக்கான சொத்து வரியை ரூ.6,000 முதல் ரூ.95,000 வரை நிலுவையில் வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் மூன்று நாட்களுக்குள் நிலுவை வரித்தொகையை முழுமையாக செலுத்தாவிட்டால், நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.



எனவே, பொதுமக்கள் தங்களது கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், திடக்கழிவு மேலாண்மை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட அனைத்து நிலுவைத் தொகைகளையும் சரிபார்த்து, ஏதேனும் பாக்கி இருந்தால் உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் பிற சட்டபூர்வ நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.