உதயநிதி ஸ்டாலின் பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை குறித்து, தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனர் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
"பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலோ அல்லது இரட்டை அர்த்தம் ஏற்படும் வகையிலோ யார் பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நபர் உதயநிதி ஸ்டாலினாக இருந்தாலும், முதலமைச்சர் விஜயாக இருந்தாலும் அல்லது வேறு எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் தவறு என்பது தவறுதான். அதே நேரத்தில், ஒரு பேச்சுக்காக உடனடியாக கைது செய்வதும் சரியான அணுகுமுறை அல்ல. சட்டப்படி முதலில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு, விசாரணை நடத்த வேண்டும். கைது என்பது கடைசி வழிமுறையாக இருக்க வேண்டுமே தவிர, முதல் நடவடிக்கையாக இருக்கக் கூடாது.
தற்போது தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சினை காவிரி நதிநீர் உரிமையாகும். இந்த நேரத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் மோதலில் நேரத்தை செலவிடாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அரசியல் மோதல்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. பாதிக்கப்படுவது தமிழ்நாட்டின் நலன்தான். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒரு சட்டம், ஆளுங்கட்சித் தலைவருக்கு ஒரு சட்டம் என்ற நிலை உருவாகக் கூடாது.
சட்டம் பழிவாங்கும் கருவியாக அல்ல; நீதியை நிலைநாட்டும் கருவியாக செயல்பட வேண்டும். தவறான பேச்சை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதேபோல், தேவையற்ற கைதையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. காவிரி போன்ற மாநில உரிமை பிரச்சினைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளை விட அரசியல் மோதல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டம் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும். அரசியல் சண்டைகளைத் தவிர்த்து, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.