திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடியில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் விஜய் அரசை விமர்சித்து பேசியதாக கூறி உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மண்டலத் தலைவர்கள், பகுதி செயலாளர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் மாநகர அணி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை டவுன் டிஎஸ்பி சுனில் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், சுனை முருகன், வேல்ராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிராக மாநிலம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டங்களின் ஒரு பகுதியாக, தூத்துக்குடியிலும் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.