மத்திய அரசின் One District One Product (ODOP) திட்டத்தில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருப்பூர், சேலம், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது, மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா பிள்ளை தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



மத்திய அரசின் One District One Product (ODOP) திட்டம், ஒவ்வொரு மாவட்டத்தின் பாரம்பரிய மற்றும் தனித்துவமான தயாரிப்புகளை உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தயாரிப்புகளுக்கு பிராண்டிங், தரச்சான்றிதழ், நவீன தொழில்நுட்ப வசதிகள், சந்தைப்படுத்தல், ஏற்றுமதி ஊக்கம் மற்றும் நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.



இந்தத் திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதோடு, கைவினைஞர்கள், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகவும் வழிவகுக்கும். மாவட்டங்களின் பாரம்பரிய தயாரிப்புகள் உலக சந்தையில் தனித்துவமான இடத்தைப் பெற்று, ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உத்தரப் பிரதேசத்தில் ODOP திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக, பல்வேறு மாவட்டங்களின் பாரம்பரிய தயாரிப்புகள் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி, ஏற்றுமதி மதிப்பு உயர்ந்ததுடன் ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் புத்துயிர் பெற்றுள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இந்த வெற்றியின் அடிப்படையிலேயே தற்போது நாட்டின் பல மாநிலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 மாவட்டங்களும் தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாவட்டங்களாக விளங்குகின்றன.



இம்மாவட்டங்களுக்கு ODOP திட்டத்தின் முழுமையான ஆதரவு கிடைப்பதன் மூலம் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தொழில் விரிவாக்கம், துணைத் தொழில்கள் உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி மேலும் வேகமடையும். இதன் மூலம் வருங்காலங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.



தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் முன்னிலைப்படுத்தி மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த முயற்சி, மாநிலத்தின் தொழில் துறைக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தும். மேலும், தமிழகம் உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உருவெடுக்க ODOP திட்டம் முக்கிய பங்காற்றும் என்று அன்னபூர்ணா பிள்ளை தெரிவித்துள்ளார்.