"வளர்ந்து நிமிர்ந்த இந்தியா" என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த முகாமில், மாணவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், எலும்புகளின் வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் உடல்நலன் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் சுவர்ணலதா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மாரியப்பன் வரவேற்புரை வழங்கினார். தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் முன்னிலை வகித்தார்.
மருத்துவர்கள் டாக்டர் மாரிமுத்து (லட்சுமி பாலி கிளினிக்) மற்றும் டாக்டர் பாலக்கண்ணன் ஆகியோர், வளர்ந்து வரும் மாணவர்களுக்கு சத்தான உணவின் முக்கியத்துவம், எலும்புகள் வலிமையாக வளர தேவையான ஊட்டச்சத்துக்கள், தினசரி உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து விளக்கமாக உரையாற்றினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்டர் மாரிமுத்து தலைமையில், மாணவர்களின் உடல் மற்றும் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உணவுமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
174 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கல்வி நிறுவனமாக விளங்கும் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாம், மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.