தூத்துக்குடி மணல்மேடு என முன்பு அழைக்கப்பட்டு வந்த பாத்திமா நகரில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயத்தின் பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று (அக்.3) தொடங்கியது.
இதையொட்டி, சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்ற கொடியேற்ற திருப்பலிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக் குரு பேரருட்திரு. ரவி பாலன் அடிகளார் தலைமை தாங்கினார். அருட்தந்தை ஜெய்கர் அடிகளார் கலந்து கொண்டு இறைமக்களுக்காக சிறப்பு வேண்டுதல்களை செய்தார்.
திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி சார்லஸ் அடிகளார் முன்னின்று நடத்தி வருகிறார். அவருடன் மண்ணின் மைந்தரான அருட்சகோதரர் செல்வா இணைந்து பணியாற்றி வருகிறார்.
மேலும், திரு இருதய அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர்நலக் கமிட்டியினர், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. ஜெரி மற்றும் பங்கு இறைமக்கள் இணைந்து பெருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
முக்கிய நிகழ்ச்சிகள்
பெருவிழாவையொட்டி வரும் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து, 12-ம் தேதி திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெற உள்ளது. 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு பரிசுத்த பாத்திமா அன்னையின் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
இத்திருப்பலிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமை தாங்க உள்ளார். பெருவிழா நாளான 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நகர் வீதிகளில் பரிசுத்த பாத்திமா அன்னையின் சப்பரபவனி நடைபெற உள்ளது.
அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளும் அன்னை, முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பெருவிழாவையொட்டி ஆலய வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பலி, ஜெப வழிபாடுகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்க உள்ளனர். பரிசுத்த பாத்திமா அன்னையின் பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் ஆசீரைப் பெறுமாறு பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி சார்லஸ் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.
பெருவிழாவையொட்டி மணல்மேடு மற்றும் பாத்திமாநகர் பகுதிகளில் ஆன்மிக உற்சாகம் நிலவி வருகிறது. பக்தர்கள் அனைவரையும் பங்கு இறைமக்கள் சார்பில் அன்புடன் வரவேற்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.