தமிழரின் பாரம்பரியம், கலை, பண்பாடு, மருத்துவம், உணவு மற்றும் நாட்டுப்புற விளையாட்டுகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் நடைபெறும் 3வது தமிழன்டா சங்கமம் 2026 விழா, வரும் ஜனவரி 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.


இந்த விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமிகு. கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் திரு. ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கின்றனர். இதற்கான அழைப்பை தமிழன்டா இயக்கம், கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் விடுத்துள்ளார்.


விழாவின் முதல் நாளான ஜனவரி 9ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தய மாரத்தான் போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பணப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. பிற பிரிவுகளில் வெற்றிபெறுவோருக்கு தமிழன்டா விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.


அதே நாளில் காலை 9 மணிக்கு நடைபெறும் பொங்கல் விழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைக்கிறார். இதில் பாரம்பரிய விளையாட்டுகள், பரிசளிப்பு விழா மற்றும் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில் பனைமர ஏறும் போட்டி, நாட்டு நாய்கள் கண்காட்சி, மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டிகள், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


மூன்றாம் நாளில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழன்டா விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.


மூன்று நாட்களும் இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, வர்மம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், இலவச கண் சிகிச்சை முகாம், பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, யோவா உலக சாதனை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க முன் அனுமதி அவசியம் என தமிழன்டா இயக்கம், கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் தெரிவித்துள்ளார்.