தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு மத்தியில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மழைநீர் தேங்காத வகையில் அனைத்து பகுதிகளிலும் வடிநீர் கால்வாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2023-ம் ஆண்டு கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் நிகழாத வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஆலோசனையின் அடிப்படையிலும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மேற்பார்வையிலும், மேயர் ஜெகன் பொியசாமி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மழைக்காலம் துவங்கிய நிலையில், கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், இன்று காலை 6 மணிக்கே மேயர் ஜெகன் பொியசாமி தன்னால் நேரடியாக நகரின் மழைநீர் நிலையை ஆய்வு செய்ய தீர்மானித்தார்.

மில்லர்புரம், பால்பாண்டி நகர், நிகிலேஷன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்தார். அங்கு மக்களிடமிருந்து நேரடியாக குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதிகாரிகளை அழைத்து மழைநீர் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

பின்னர் நிகிலேஷன் நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் ஒட்டிய ஓடையை நேரடியாக பார்த்து ஆய்வு செய்ய, தண்டவாளத்தில் ஏறி சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்தே ஓடை நிலையை பார்வையிட்டார். பல இடங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததை கண்டதும், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களை அழைத்து உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் ராஜகோபால் நகர், ராஜீவ் நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறிதளவு மழைநீர் தேங்கியிருந்ததை பார்வையிட்டு, அதை உடனடியாக அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளிடம் கூறினார்.

மழைக்காலத்தின் நடுவே, இருசக்கர வாகனத்தை தானே ஓட்டி, மழைநீர் தேங்கிய ஆறு தெருக்களில் சென்று மக்களுடன் நேரடியாக பேசிச் சிறப்பான தீர்வுகளை வழங்கியதும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நகரை வலம் வந்த மேயரின் செயல்பாடு தூத்துக்குடி முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில்,

> “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி, எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மழை பெய்து நின்ற சில மணி நேரங்களுக்குள் மாநகரம் முழுவதும் நீர் தேங்கக்கூடாது என்பதே எங்களது இலக்கு. மக்களுக்கு கொடுத்துள்ள நம்பிக்கையை நனவாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம்,” என்றார்.

பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி மற்றும் ஆணையர் ப்ரியங்கா ஆகியோர், 4-ம் கேட் மற்றும் சங்கரபோரி ஜிபி காலணி பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளநீர் வெளியேற்ற பணிகளையும் நேரில் பார்வையிட்டனர்.

ஆய்வின் போது நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், ஜான், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், வேல்முருகன், மற்றும் மேயர்-ஆணையர் அலுவலக உதவியாளர்கள் துரைமணி, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.