தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், மாநகராட்சி பணிகளில் எங்களோடு இணைந்து சிறப்பாக செயல்பட்ட அரசுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டி வழிகாட்டிய பத்திரிகை நண்பர்களுக்கு மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
இந்த குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் கடந்த 18 மாதங்களாக மாநகராட்சி பகுதிகளில் தொடர் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வருவதாக தெரிவித்த அவர், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்பட்ட மாநகராட்சி தொடர்பான பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பாக தெற்கு மண்டலத்தில் இதுவரை 685 மனுக்கள் பெறப்பட்டு, 665 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள மனுக்களுக்கும் விரைவில் முறைப்படி தீர்வு காணப்படும் என்றார்.
இந்த பகுதி முன்பு ஊராட்சி பகுதியாக இருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதாகவும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பத்து ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் மேயர் கூறினார்.
4 அடி, 5 அடி போன்ற குறுகிய சாலைகள்கூட போடப்பட்டுள்ளதாகவும், மழைநீர் தேங்காத வகையில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த வடகிழக்கு பருவமழையின்போது எங்கும் நீர் தேங்கவில்லை என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மாநகராட்சி முழுமையாக தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், புதிய கழிவுநீர் கால்வாய்கள், பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 2022, 2023, 2024 ஆண்டுகளின் கனமழையை வெற்றிகரமாக எதிர்கொண்டு 2025-ஐ கடந்து வருவதாக அவர் தெரிவித்தார். இனி எந்த ஒரு பகுதியிலும் மழைநீர் தேங்காத நிலை உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
குடிநீர் விநியோகத்தில், ஐந்து வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் கூறினார். திருச்செந்தூர் சாலையில் சில இடங்களில் தெரு மின்விளக்குகள் எரியாததற்கு, கனரக வாகனங்கள் மின்கம்பங்களை சேதப்படுத்துவதே காரணம் என விளக்கிய மேயர், அரசு சொத்துகளை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றார். எரியாத மின்விளக்குகள் விரைவில் படிப்படியாக சரிசெய்யப்படும் என்றும், இந்த பகுதியில் நான்கு முக்கிய இடங்களில் உயர்மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
15 வார்டுகள் அடங்கிய தெற்கு மண்டலத்தில் பெரும்பாலான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விடுபட்ட சாலைகள் இருந்தால் பொதுமக்கள் மனு அளிப்பதன் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த மழைக்காலத்தில் கோரம்பள்ளத்திலிருந்து உப்பாத்து ஓடை வரை 12 கிலோ மீட்டர் தூரம் முறைப்படுத்தியதன் மூலம் தேவையற்ற வெள்ளநீர் கடலுக்கு சென்றதாகவும், அதனால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் மேயர் குறிப்பிட்டார்.
கூட்டத்தின் முடிவில், குறுகிய காலத்தில் இத்தனை பணிகளை சிறப்பாக நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு நன்றியை தெரிவித்தார். அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் சரவணக்குமார், நகர அமைப்பு திட்ட பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் முனீர் அகமது, நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை மற்றும் துணை பொறியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், பகுதி பிரதிநிதிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.