தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் சில பகுதிகளில் கழிவுநீர் கான்கள் அடைப்பு ஏற்பட்டு, வீடுகள் அருகே தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்படும் நிலை உருவாகிறது. இதே பிரச்சினை போல்டன்புரம் பகுதியில் உருவானதை அடுத்து, அங்குள்ள மக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனிடம் நேரில் புகார் தெரிவித்தனர்.

புகார் கிடைத்ததும் காத்திருக்காமல் “உடனடி தீர்வு” என்ற கொள்கையில் செயல்பட்ட மேயர் ஜெகன், போல்டன்புரம் 3-வது தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கான்களில் ஏற்பட்ட அடைப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அதன் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜபாண்டி, ஆய்வாளர்கள் மற்றும் தூய்மைத் தொழிலாளர்கள் களத்தில் இறங்கினர்.

பகுதியை ஆய்வு செய்தபோது, கழிவுநீர் கான்களில் சுமார் 4 அடி உயரத்துக்கு மணல் தேங்கி கடுமையான அடைப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பணியாளர்கள் உடனடியாக மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டு, 20 அடி நீளத்துக்கு மேலாக 5 அடி உயரத்தில் தேங்கியிருந்த மணலை முழுவதும் அகற்றி பாதைகளை சுத்தப்படுத்தினர்.

இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மேயர் ஜெகன் நேரில் சென்று செயல்பாட்டை பார்வையிட்டார். மேலும், அந்தப் பகுதி முழுவதும் கழிவுநீர் கான்களில் உள்ள அடைப்புகளை முழுவதுமாக நீக்கி, தண்ணீர் தேங்காத சூழலை உருவாக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது களத்தில் உழைத்துக் கொண்டிருந்த தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்களை மேயர் ஜெகன் பாராட்டி, “இத்தனை கடினமான பணிகளை தைரியமாகச் செய்து நகரை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் போன்றவர்களால்தான் சாத்தியம்”
என்று உருக்கமாக பேசினார்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த மேயரும், விரைவில் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களும் போல்டன்புரம் பகுதி மக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளனர்.