தவெக தலைவர் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திமுக நிர்வாகியுமான பி.டி.செல்வகுமார் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து, விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவரது பேட்டி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பி.டி.செல்வகுமார், பேட்டியின் போது, “திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், சமூக அங்கீகாரத்தையும் வழங்கி வருகிறது. ஆனால் தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை; ஏளனமாகவே பார்க்கப்படுகிறார்கள்” எனக் கூறினார்.
மேலும், “விஜய் புதிதாக கட்சியில் சேர்ந்த சிலரை மட்டும் முன்னிலைப்படுத்தி, தாய், தந்தை போன்று கட்சிக்காக உழைத்தவர்களை ஓரம் கட்டி வருகிறார். ஜெயசீலன் உள்ளிட்ட பலர் தற்போது அவருடன் இல்லை. கட்சிக்குள் சில மாபியா கும்பல்கள் செயல்பட்டு வருவதால், கட்சி பின்னோக்கி செல்கிறது” என்றார்.
தூத்துக்குடியில் நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், “அஜிதா என்ற பெண் விஜயை சந்திக்க முனைந்த போது, அவர் மூன்று நிமிடம் கூட ஒதுக்கவில்லை. அந்த மன வேதனையில்தான் அந்த பெண் தூக்க மாத்திரை உட்கொண்டுள்ளார். விஜய்க்கு பால் அபிஷேகம் செய்பவர்களுக்கும், அவருக்காக உழைத்தவர்களுக்கும் மரியாதை இல்லை” என குற்றம்சாட்டினார்.
விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதை நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும்” என பதிலளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகம் முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் விஜய் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு பணமே முக்கியம். பூத் கமிட்டி இன்னும் வலுப்படுத்தப்படவில்லை. இதனால் பாதிக்கப்படப் போவது தமிழக மக்கள் தான்” என்றார்.
நடிகர்களின் கூட்டம் குறித்து பேசிய பி.டி.செல்வகுமார், “நடிகை சினேகா, நமீதா வந்தாலும் கூட்டம் வரும். முன்னதாக சில்க் ஸ்மிதா வந்த காலத்திலும் கூட்டம் வந்தது. நடிகர்கள் வந்தால் திமுக, பாஜக என எல்லா கட்சியினரும் குடும்பத்தோடு வந்து பார்ப்பது இயல்பு. அந்த கூட்டத்தை வைத்து முதலமைச்சர் ஆகலாம் என்று விஜய் மாயையில் இருக்கிறார்” என விமர்சித்தார்.
மேலும், “200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன் என்று சொல்கிறார் விஜய். அதில் நூறு கோடி ரூபாயை மக்களுக்கு நலத்திட்டமாக வழங்கியிருக்கலாமே? சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆறுகளை சுத்தம் செய்ய 15 கோடி போதும் என்று சொன்னேன்; அதை கூட அவர் செய்யவில்லை” என்றார்.
தவெக கட்சியில் வசூல் வேட்டை நடைபெறுகிறது என்றும், “பொங்கலுக்குப் பிறகு 20 மாவட்ட செயலாளர்களை திமுகவில் இணைக்கும் விழா நடைபெறும்” எனவும் அவர் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இறுதியாக, “சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜூலை–ஆகஸ்ட் மாதங்களில் விஜய் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வார். ரசிகர்களிடம் பிளாக் டிக்கெட் விற்கக் கூடாது என்று அவர் தைரியமாக அறிவிப்பு வெளியிடுவாரா?” என கேள்வி எழுப்பி தனது பேட்டியை முடித்தார்.