இன்று 25.12.2025 முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினம் நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் அவர்கள் உரையாற்றுகையில், 1980 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை நிறுவியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் என்றும், அவர் தொடங்கி வைத்த அந்த கட்சி இன்று இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருவது பெருமைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்தார். மேலும், நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முதன்முதலாக வலுவான அடித்தளத்தை அமைத்தவர் வாஜ்பாய் அவர்கள் என அவர் குறிப்பிட்டார்.


அவரை தொடர்ந்து மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் தேன்மொழி, சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் பிரச்சாரப் பிரிவு மாவட்ட செயலாளர் அனுஷ்யா ஆகியோர் வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் குறித்து உரையாற்றினர்.


மேலும், மாவட்ட அலுவலகத்தில் மட்டுமின்றி கிழக்கு மண்டல் சார்பாக கீழரத வீதி பகுதியிலும், தெற்கு மண்டல் சார்பாக முனியசாமிபுரத்திலும், மேற்கு மண்டல் சார்பாக சண்முகபுரத்திலும், வடக்கு மண்டல் சார்பாக சில்வர்புரத்திலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


இதனுடன், மகளிர் அணி சார்பில் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் செல்வி அவர்களின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்பாக 108 விளக்குகள் ஏற்றி அவரது பிறந்த நாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு முன்னாள் பிரதமருக்கு மரியாதை செலுத்தினர்.