தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று காலை பல்வேறு கடற்கரை பகுதிகளில் சுத்தம், பசுமை வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு மாபெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன.

இனிகோ நகர் கடற்கரையில் மாநகராட்சி மற்றும் செயிண்ட் மேரிஸ் கல்லூரி மாணவியர்கள் இணைந்து நடத்திய கூட்டு தூய்மைப் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திரு. சுரேஷ்குமார், மண்டல தலைவர் தொ. நிர்மல்ராஜ், கவுன்சிலர் ரெக்ஸ்லின் உள்ளிட்டோர் பங்கேற்று உற்சாகம் அளித்தனர்.

மாணவிகள், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் பிரியங்கா அதிகாலையிலேயே களமிறங்கி கடற்கரையில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள், மீன் வலைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றினர். கருவேல செடிகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. மேலும், 5 கி.மீ. நீள நடைபாதை அமைக்கும் பணிகளையும், மின்விளக்குகள் நிறுவப்பட உள்ள இடங்களையும் மேயர் நேரில் ஆய்வு செய்தார்.

பனை விதைகள் நடும் பணியும் முன்னெடுக்கப்பட்டு, “இயற்கையை பேணுவதே நம்முடைய உண்மையான முன்னேற்றம்” என்ற செய்தி பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

மேயர் உரை

“தூத்துக்குடி மாநகராட்சியில் தினசரி 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் 120 டன் மக்கும்–மக்காத குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்து வருகின்றோம். ஆனால் மாசு இல்லாத மாநகரம் உருவாக மக்கள் ஒத்துழைப்பு அவசியம். கடலுக்குள் கழிவு சேரும்போது மீன்களின் இனப்பெருக்கமே ஆபத்துக்குள்ளாகிறது. கடல் நமது தாய் என்பதால், பொதுமக்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்கள் பணி செய்வதே எங்களின் கடமை” என்று மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தினார்.

ரோச் பூங்கா பசுமை முயற்சி

ரோச் பூங்கா கடற்கரையில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வீ கேன் தொண்டு நிறுவனம் இணைந்து, ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி மற்றும் கூட்டு தூய்மைப் பணி ஆகியவற்றையும் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இது, கடற்கரையை பசுமையாகவும் சுத்தமாகவும் மாற்றும் வரலாற்றுச் செயல் என பாராட்டப்பட்டது.

முத்துநகர் மரம் நடும் பணி

முத்துநகர் கடற்கரையில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சாரண சாரணியர் இயக்கம் இணைந்து மரம் நடும் பணி, கூட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியையும் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். மாணவ–மாணவியர்கள், தன்னார்வலர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர்.

கலந்து கொண்டோர்

வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், வீகென் டிரஸ்ட் தலைவர் ஏஞ்சலின், செயலாளர் முத்துராஜ், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், மேயரின் உதவியாளர் ரமேஷ், ஆணையரின் உதவியாளர் துரைமணி, அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உற்சாகமாக பங்கேற்றனர்.

துப்புரவு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மாநகராட்சி சார்பில் முககவசம், கையுறை, காலை உணவு வழங்கப்பட்டு, சுத்தமும் பசுமையும் பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.