தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய செவிலியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று தினங்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்கரை ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை என்றும் செவிலியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள், மூன்றாவது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் தொகுப்பூதிய செவிலியர்களாக பணியாற்றி வருகிறோம்.
சுகாதாரத்துறை அமைச்சர் காலிப் பணியிடங்கள் இல்லை என்று கூறுகிறார். ஆனால் 2023 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, தமிழகத்தில் சுமார் 18 ஆயிரம் செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு மருத்துவமனைகளின் கட்டிடங்கள் மட்டுமே உயர்கின்றன; எங்களின் வாழ்வாதாரம் உயரவில்லை” என்று தெரிவித்தனர்.
மேலும், “தேர்தல் வாக்குறுதி எண் 356-ன் படி தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் எங்களது சேவையை முதலமைச்சர் பாராட்டினார். ஆனால் இன்று நாங்கள் உரிமைக்காக தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், அரசு மருத்துவமனைகள் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும், அதற்கேற்ற வகையில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். சுகாதாரத்துறை அமைச்சர் போராட்டம் நடைபெறவில்லை என்றும், செவிலியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாகவும் கூறியுள்ள நிலையில், “நாங்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் சுமார் 8,000 தொகுப்பூதிய செவிலியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்” என தொகுப்பூதிய செவிலியர்கள் உறுதியாக தெரிவித்தனர்.