இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 2026ஆம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்ற நிலையில், தமிழகத்திலும் புதிய ஆண்டை உலக நாடுகள் முழுவதும் எதிர்பார்ப்புடன் நோக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2026 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


தூத்துக்குடி தமிழ்சாலையில் அமைந்துள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்ராஜ், துணைத் தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.


தொடர்ந்து ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் உறுப்பினர்கள் அகமதுஜான், இசக்கிராஜா, ரமேஷ்கண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்பித்தனர்.


புதிய ஆண்டில் பத்திரிகையாளர்களின் நலன் மேம்படவும், உண்மை செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியில் மேலும் உற்சாகத்துடன் செயல்படவும் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.