தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வேடதாங்கல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது என, 20வது வார்டு திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்களின் சந்திப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போல்பேட்டை பகுதி 20வது வார்டு, 52ம் பாக கலந்துரையாடல் கூட்டம் போல்பேட்டை கிழக்கு பிரமுகர் கணேசன் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான இரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி நாராயணன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர். அவர்கள் உரையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் மாநகராட்சி மேயரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிக்குட்பட்ட 20வது வார்டில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பெயரும் வாக்காளர் பட்டியலில் முழுமையாக இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெயர் விடுபட்டவர்கள் அனைவரையும் அடுத்த கட்ட சேர்க்கையில் இணைக்க வேண்டும் என்றும், திமுக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தனர். விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்டம், தகுதியான அனைத்து மகளிர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் திட்டம், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் எனக் கூறினர்.
மேலும், “எத்தனை அணிகள் களமிறங்கினாலும், தமிழக அரசியலில் முதன்மையான அணி திமுகதான். தேர்தல் நேரத்தில் மட்டும் தோன்றும் வேடதாங்கல் பறவைகள் போன்ற அரசியல் கட்சிகளுக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பதில் அளிக்க வேண்டும்” எனவும், வரும் 20 நாட்களில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து திமுகவின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பாக முகவர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜான் ஸ்டாலின் நன்றி உரையாற்றினார்.