ஒன்றிய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், வெறும் கருத்து அரசியலால் மக்களை ஏமாற்ற முடியாது; களத்தில் பணியாற்றும் திராவிட மாடல் ஆட்சிக்கே மக்கள் ஆதரவு என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக–அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 28வது வார்டுக்குட்பட்ட பாகம் எண் 189 வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்களுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஒருவரின் பெயரும் விடுபடக்கூடாது. பொதுமக்கள் மற்றும் நமது ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளதா என்பதை முகவர்கள் உறுதி செய்ய வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களின் மூலம் சேர்க்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினார்.
மேலும், “வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அடுத்த கட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய, மக்களை நேரில் சந்தித்து திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.
திமுக ஆட்சியின் முக்கியமான சாதனைகளை விளக்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாணவிகளுக்கான தோழி விடுதிகள், திறனாய்வு பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் பயன் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “பல நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்காமல், ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் போக்கை கடைப்பிடிக்கிறது” என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “மழை, வெள்ளம் உள்ளிட்ட எந்த பேரிடர் நேர்ந்தாலும் திமுகவினர் தான் முதலில் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவுகின்றனர். ஆனால் பாஜக–அதிமுக கூட்டணியினர் ‘நாங்கள் இருக்கிறோம்’ என கருத்து வெளியிடுவதோடு நிற்கிறார்கள். கருத்து அரசியலுக்கு கட்; கள அரசியலுக்கு கிரீன் சிக்னல் என்பதே மக்களின் முடிவாக 2026 தேர்தலில் வெளிப்பட வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் முழு ஆதரவு வழங்க வேண்டும்” என அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர்கள் கருப்பசாமி, சாமிநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், மீனாட்சிசுந்தரம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், வழக்கறிஞர் சுபேந்திரன், வட்ட பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், மாரிக்கண்ணன், பாஸ்கர், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், சிவா மாரியப்பன், லாரன்ஸ் அண்ணாத்துரை, மணி அல்பட் பிஎல்ஏ2 மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.