தூத்துக்குடி துறைமுகம் சாலையில் அமைந்துள்ள எஸ்.இ.பி.சி தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் உலர் சாம்பலை, நேரடியாக உலர் சாம்பல் செங்கல் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


மத்திய அரசின் உத்தரவின்படி, அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் உலர் சாம்பல் கழிவுகளில் குறைந்தது 20 சதவீதத்தை உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும். இதன்படி, இதுவரை எஸ்.இ.பி.சி நிறுவனம் உலர் சாம்பலை வழங்கி வந்த நிலையில், தற்போது டெண்டர் முறையில் வழங்கப்படும் என அறிவித்து, டெண்டர் விண்ணப்பங்கள் எதையும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டினர்.


மேலும், டெண்டர் விண்ணப்பத்தை ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உலர் சாம்பல் விற்பனை செய்யப்படுவதால், நேரடியாக வாங்க முடியாத உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்களிடம் ஒரு டன் உலர் சாம்பலுக்கு ரூ.700 வரை கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.


இதுகுறித்து தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சிவக்குமார் பேசுகையில், “எஸ்.இ.பி.சி நிறுவனம் உலர் சாம்பலை நேரடியாக செங்கல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். டெண்டர் முறையில் விற்பனை செய்யப்படுவதாக இருந்தால், அதனை வெளிப்படையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். சில குறிப்பிட்ட நபர்களுக்கே உலர் சாம்பல் வழங்கப்படுவதால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்” என தெரிவித்தார்.


உலர் சாம்பல் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமநிலை கோரி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.