தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம், அனல்மின் நிலையம், உப்பளங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, திரைமறைவாக செயல்பட்டு வந்த போலி லாட்டரி கும்பல் ஒன்று தினசரி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இந்த கும்பல் போலியான ஈ-மெயில் முகவரிகள், வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் பல்வேறு பெயர்களில் சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, சட்டபூர்வமான லாட்டரி விற்பனை நடைபெறுவது போல தோற்றம் ஏற்படுத்தி, தொழிலாளர்களிடம் தினசரி ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.


இது குறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் மதன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி தென்பாகம், மத்திய பாகம், வடபாகம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம், சிப்காட் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட காவல் சரகங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக தாளமுத்துநகர் காவல் சரகத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி சந்திப்பு பகுதியில் போலி லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (53), சிலுவைப்பட்டியை சேர்ந்த காசிலிங்கம் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலி நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், தொழிலாளர்களின் குறைந்த வருமானத்தை குறிவைத்து, அதிக விலைக்கு போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மூடை சுமை தூக்கும் தொழிலாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை முழுமையாக கைது செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற மோசடிகள் மீண்டும் நடைபெறாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.