தூத்துக்குடி மாநகராட்சி 9வது வார்டு பூபாலராயர்புரம் பத்ரகாளியம்மன் கோவில் 2வது தெருவில், கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால் சிறிய மழை பெய்தாலே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியது.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் குடியிருப்போர் தங்கள் வீடுகளில் துர்நாற்றத்தால் அவதிப்பட்டனர். இதுகுறித்து “செய்திக்களம் நியூஸ்” இணையதளத்தில் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் உடனடி தலையீடு செய்தார். அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, மழைநீரை வெளியேற்றவும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யவும் உடனடி உத்தரவு பிறப்பித்தார்.
அமைச்சரின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 12வது வார்டு கவுன்சிலர் தெய்வேந்திரன், 23வது வார்டு கவுன்சிலர் தனலெட்சுமி, மற்றும் பகுதி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து, பூபாலராயர்புரம் பகுதியில் விரைந்து பணிகளைத் தொடங்கினர். கழிவுநீர் கால்வாய்களில் இருந்த அடைப்புகள் அகற்றப்பட்டு, வீடுகளில் புகுந்த மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், பணிகள் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகள் விரைவில் நிறைவு பெற அதிகாரிகளுக்கு நேர்முக அறிவுறுத்தல்களை வழங்கினார். அப்பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்ததை வரவேற்று,
“எங்களின் குரல் உடனே கேட்டுக் கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!”
என்று தெரிவித்தனர். அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் இந்தச் செயல், தூத்துக்குடி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமார் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.