தூத்துக்குடி எம்பவர் இந்தியா, சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா மற்றும் தூய மரியன்னை கல்லூரி இணைந்து, பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தின.

நிகழ்ச்சியை மாவட்ட இணைய குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் துவக்கி வைத்தார். தூய மரியன்னை கல்லூரி முதல்வர் ஜெசி வாழ்த்துரை வழங்கினார்.

கருத்தரங்கில் எம்பவர் இந்தியா கௌரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான ஆ. சங்கர் உரையாற்றியபோது,
“பாதுகாப்பான டிஜிட்டல் பயணத்திற்கு ஒவ்வொருவரின் பொறுப்பும், பங்களிப்பும் அவசியம். அறிமுகமில்லாதவர்களின் வேண்டுகோளை நம்பி ஏடிஎம் கார்டு அல்லது வங்கி கணக்கை பயன்படுத்தி உதவுவது பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

பெண்கள் மீது நடைபெறும் இணைய குற்றங்கள், வழக்குகள் மற்றும் நடைமுறைகள் குறித்து சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா தலைவர் பாலு சுவாமிநாதன் எடுத்துரைத்தார். இணைய குற்றங்களின் தொழில் நுட்ப அம்சங்களை செயலாளர் விஜயகுமார் விளக்கினார்.

முன்னதாக பொருளாதாரத்துறை பேராசிரியை ரதி வரவேற்றார். மாணவி முத்து மதுமிதா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நுகர்வோர் மற்றும் மனித உரிமை மன்ற பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.