தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொடர் போராட்டத்தால் இன்று சடையனேரி கால்வாய் திறக்கப்பட்டது.

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மேல மருதூர் கால்வாய் திறக்கப்பட்டால் அதன் வழியாகச் செல்லும் நீர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 10 குளங்களை நிரப்பி, விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயனளித்து வந்தது. இந்தக் குளங்களில் உபரி நீர் சடையனேரி கால்வாய் வழியாக உடன்குடி, சாத்தான்குளம், நங்கைமொழி போன்ற பகுதிகளுக்கு சென்றடைந்து அங்குள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய பாசன ஆதாரமாக இருந்து வந்தது.

ஆனால் இந்த ஆண்டில் பருவமழை ஆரம்பமாகி பல குளங்கள் நிரம்பியிருந்த போதிலும், சடையனேரி கால்வாய் திறக்கப்படாததால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கன் தலைமையில் சாத்தான்குளம் காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதற்கு முன்பாக, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இதே கோரிக்கையை முன்வைத்து பாஜக சார்பில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் திறக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பாஜக நிர்வாகிகள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

ஆனால் உறுதியானது நடைமுறையில் அமலாகாததால், இன்று மீண்டும் மாவட்ட தலைவர் சித்ராங்கன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜகவின் உறுதியான போராட்டத்தால், அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சடையனேரி கால்வாயை இன்று திறந்தனர்.

இதன் மூலம் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்ததாகவும், இது பாஜகவின் வெற்றி எனவும் மாவட்ட தலைவர் சித்ராங்கன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர், மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.