சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “உடன்பிறப்பே வா” எனும் தலைப்பில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளின் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகர மற்றும் பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொகுதி வாரியாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, மக்கள் மனநிலை, அரசின் சாதனைகள், அடுத்த தேர்தலுக்கான அரசியல் நிலைமைகள், தொகுதி முன்னேற்றம் ஆகிய அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்தார். மேலும், வரவிருக்கும் தேர்தலுக்கான கட்சி வலுசேர்க்கை, அடித்தள அமைப்பு, மக்களுடன் தொடர்பு மேம்பாடு போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருமான மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்று, தொகுதி நிலவரம் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கமளித்தனர்.