வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள், மேலும் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் எம்.காம்., பி.எட்., எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் பணிகளின் ஒரு பகுதியாக இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும், பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


அதன்படி, சிறப்பு முகாம்கள்
டிசம்பர் 27, 28 (2025) மற்றும்
ஜனவரி 03, 04 (2026) ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.


18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள், புதிய வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இம்முகாம்களில் விண்ணப்பிக்கலாம். அதேபோல், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளவும், ஏற்கனவே உள்ள பதிவுகளில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த முகாம்கள் வாய்ப்பளிக்கின்றன.


வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்பதால், தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பி. கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.