பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் R. சரத்குமார், புளியங்குடியில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய R. சரத்குமார், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். “திராவிட மாடல் அரசு சாதனை புரியக்கூடிய அரசு, வாயால் வடை சுடக்கூடிய அரசு இல்லை என்று முதல்வர் கூறுகிறாரே?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர்கள் அப்படித்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நாம் உண்மையைச் சொன்னாலும் அதைப் பொய் என குற்றம்சாட்டுவார்கள். பல்நோக்கு மருத்துவமனை விவகாரத்திலும் இதே போக்கை அவர்கள் கடைப்பிடித்தனர்,” என்று தெரிவித்தார்.


மேலும், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக திமுக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கிறார்களே?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு 125 நாளாக உயர்த்தியுள்ளது. பணிகள் நடைபெற வேண்டிய இடங்களை மத்திய அரசு ஆய்வு செய்து அறிவுறுத்தும்; அந்த இடங்களில் மட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளோம். அதேபோல், இந்தத் திட்டத்தில் 40 சதவீதம் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.


தொடர்ந்து அவர் பேசுகையில், “மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள் நல்ல திட்டங்களாக இருந்தால் அவற்றை திமுக தாங்களே செய்தது போல கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அந்தத் திட்டங்களில் அவர்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் உடனடியாக மத்திய அரசை குறை சொல்வதையே வழக்கமாக செய்து வருகின்றனர்,” எனவும் குற்றம்சாட்டினார்.


இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம் ராஜேஷ், மாநில நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.