தூத்துக்குடி மாநகரில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனை அடுத்து மழைநீர் அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சி மேயர் ஜெகன் இரவு நேரத்திலும் களத்தில் இறங்கி, மழைநீர் தேங்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டார். இரவு 7 மணி முதல் 10 மணி வரை — மூன்று மணி நேரம் தெருத்தெருவாக பல இடங்களை சுற்றி ஆய்வு மேற்கொண்டார்.

முதலில் ஓம் சாந்தி நகரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளைப் பார்வையிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்ட மின்மோட்டார் மூலம் நீர் அப்புறப்படுத்தும் பணிகள் சீராக நடைபெறுகின்றனவா என ஆய்வு செய்தார். “மழைநீர் குறையும்வரை இரவு முழுவதும் மோட்டார்கள் இயக்கப்பட வேண்டும்,” என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் எட்டையபுரம் ரோடு, ஹவுசிங் போர்டு, டி மார்ட் எதிரில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டார். சில இடங்களில் மோட்டார் இயங்காததை கண்ட அவர் உடனடியாக இயக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி நகரில் மழைநீர் நிலைமை மற்றும் கழிவு நீர் ஊற்று நிலையத்தின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார். அங்கு உள்ள மூன்று மின்மோட்டார்களும் இடையறாது இயங்க வேண்டும் என்றும், எக்காரணத்திற்கும் நிறுத்தப்படக்கூடாது என்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின் பி.என்.டி காலனி, ராஜீவ் நகர், பால்பாண்டி நகர், கதிர்வேல் நகர், கோக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை பார்வையிட்டு, அங்கு நடக்கும் நீர் அப்புறப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பல இடங்களில் மக்கள் சந்தித்து, “முன்பெல்லாம் மாதக்கணக்கில் நீர் தேங்கி இருந்தது. இப்போது மாநகராட்சி விரைவாக நடவடிக்கை எடுத்து, சில நாட்களில் நீர் குறைந்துள்ளது,” என்று பாராட்டினர். மேலும், “வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு செய்ய வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தனர்.

இரவு நேரத்தில் டார்ச் லைட் உதவியுடன் மழைநீர் நிலையை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகனின் திடீர் ஆய்வு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆய்வில் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், திமுக பிரமுகர் பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ஜேஸ்பர் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.