கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பான கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பனிமய மாதா பங்கு தந்தை ஸ்டார்வின் தலைமை வகித்தார்.
பனிமய மாதா ஆலய வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பக்தர்களையும் பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது. விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “பனிமய மாதா ஆலயத்தின் வரலாறு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்திருக்கோவில் திருவிழாவிற்கு தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது மகிழ்ச்சியளிக்கிறது. எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்க வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வதே கடவுளுக்கு செய்யும் உண்மையான சேவையாகும்” என்றார்.
மேலும், “நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலும், அன்பும் மனிதர்களை ஒன்றிணைத்து நல்ல பாதையில் அழைத்துச் செல்கிறது. இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் உழைக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடலுக்குச் சென்று வாழ்வாதாரம் தேடும் மீனவர்கள் தினமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீன்பிடி தடைக்கால உதவித்தொகையை உயர்த்தியுள்ளது. டீசல் மானியம் வழங்கப்பட்டு, மீன்பிடி துறைமுகங்களில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
“எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதெல்லாம் அது மக்களுக்கான ஆட்சியாக இருந்து வருகிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழக மக்கள் பல்வேறு நலத்திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர். சிறுபான்மை மக்களின் அரணாக திமுக எப்போதும் இருக்கும். எல்லா மதங்களையும் மதிப்போம்; மதவெறியையே எதிர்ப்போம். அன்பையும் சமத்துவத்தையும் வளர்ப்போம்” என்று கூறிய அமைச்சர், திமுக அரசுக்கு தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் டென்சிங், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், கமலி, நிர்மலா உள்ளிட்டோர், பாதிரியார்கள், திருச்சபை ஊழியர்கள், இளைஞரணியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.