வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளிலும் பல்வேறு அடிப்படை மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி முழுவதும் 2758 புதிய தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் 30 இடங்களில் உயர் மின் கோபுர (ஹைமாஸ்க்) விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்றம் முன்பு உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் முன்பிருந்து ராஜாஜி பூங்கா வரை மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பத்திரப்பதிவு துறை அலுவலகம் வரை மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
“திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் வளர்ச்சி பணிகள் புதிய வேகத்தைப் பெற்றுள்ளன. புறநகர் பகுதிகளில் உள்ள ஐந்து கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போதும், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தவிதமான திட்டமிடலுமின்றி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
திமுக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளாக 60 வார்டுகளிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கடந்த 4½ ஆண்டுகளில் சாதனைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. 45 மாதங்களில் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் கோரிய அடிப்படை கட்டமைப்பு பணிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகள், கழிவுநீர்க் கால்வாய்கள், பேவர் பிளாக் சாலைகள் உள்ளிட்ட பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
“புறநகர் பகுதிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாநகராட்சி முழுவதும் 2758 புதிய தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் கூடுதலாக பல பகுதிகளில் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.
அதேபோல் பொதுமக்கள், வணிகர்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் அதிநவீன உயர் மின் கோபுர ஹைமாஸ்க் விளக்குகள் திருநெல்வேலி சாலை மேம்பாலம் பகுதி, மாப்பிளையூரணி சந்திப்பு உள்ளிட்ட 30 இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 20 இடங்களில் புதிதாக இதுபோன்ற விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் பொதுமக்கள் அச்சமின்றி வந்து செல்லும் வகையில் இரவை பகல்போல் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன,” என்றார்.
வளர்ந்து வரும் தொழில் நகரமான தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள், வணிகர்கள், பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மேலும் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் லாரன்ஸ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.