ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் உத்தரவின் பேரிலும், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் அவர்களின் ஆலோசனையின் படியும் இந்த சிறப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இருசக்கர வாகனங்களில் அதிக சத்தம் தரும் சைரன் மற்றும் ஹார்ன்களை பயன்படுத்துதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்தல், சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல், நடு இரவில் பைக் ரேஸில் ஈடுபடுதல் போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மேலும், சிறுவர்கள் தொடர்பான வழக்குகளில் பெற்றோர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அபராதத் தொகை வசூலிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நேற்று தூத்துக்குடி மாநகரில் உள்ள மேல பெரிய காட்டன் ரோடு பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் காசிராஜன், சண்முக பாலன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சோதனையில் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரண்டு பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்றும், நாளையும், ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதியன்றும் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இதேபோன்ற தீவிர கண்காணிப்பு தொடரும் என்றும், விதிகளை மீறினால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் கூறுகையில், “புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடக் கூடாது,” என தெரிவித்தார்.