தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3வது மைல் மற்றும் ராஜீவ் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பொதுமக்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவர் பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் ஓட்டம், வடிகால் இணைப்புகள் மற்றும் பம்ப் செட் வசதிகளைப் பரிசோதித்து, தேவையான இடங்களில் உடனடி திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மாநகராட்சி முழுவதும் மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.