தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிடும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாயிலாக  தமிழக முதல்வருக்கு முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கனகராஜ் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது :-


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் ஆதரவு என்ற பெயரில் ஒரு மாய போராட்டத்தை, வாரந்தோறும் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒரு பதட்டமான சூழ்நிலை தொடர்ந்து தூத்துக்குடியில் நிலவி வருகிறது.

இவர்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அவலமும் தூத்துக்குடியில் தொடர்கிறது. காவல் துறையினர் அனுமதியின்றி கூட்டம் கூடுவதால் தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வும், மரண பயம் ஏற்படுவதால் பதட்டமான சூழலை அடிக்கடி சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இவர்களது சட்டவிதி மீறலால் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எதிர்ப்பாளர்களை மீண்டும் போராட்டத்தில் இறங்க தூண்டும் செயலாகவும் இது உருமாறி வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும், தொடர்ந்து போராடும் நிலை வந்தால் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஏற்கனவே நடந்து முடிந்த துப்பாக்கி சூட்டை இன்றுவரை எங்களால் மறக்கவும் முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை. ஆகையால், தமிழக அரசு மற்றும் உளவுத்துறை விழிப்புடன் இவ்விஷயத்தை முன்னெடுத்து கண்காணிப்புகளில் ஈடுபட்டு முழுக்கவனத்தினை செலுத்திட வேண்டுகின்றோம். தூத்துக்குடி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என்று கூறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படும் அமைப்புகள், மகளிர் குழுக்கள், மறைமுகமாக செயல்படும் மற்றும் தூண்டிவிடும் அரசியல், பிரமுகர்கள், விலை பேசி அழைத்த மக்களை, போராட்ட களத்திற்கு உரிய அனுமதியின்றி அழைத்து செல்லும் வாகனங்கள் மீதும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் வகையில் வாரந்தோறும் திங்கள் கிழமை குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் கலந்து கொள்வது போல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை விதைக்கும் வகையில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி வருபவர்கள் மீதும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டியது மாவட்ட காவல்துறையின் கடமையாகும்.

ஆகையால், தமிழக உள்துறை, உளவுத்துறை போலீசார் மூலம் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து, தூத்துக்குடி மக்கள் என்ற போர்வையில் பல மாவட்டங்களிலிருந்து விலைபேசி இறக்குமதி செய்யப்படும் போலி போராட்டக்காரர்கள் மீது கடுமையான கிரிமினல் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து,
தூத்துக்குடியில் பொதுமக்களின் பாதுகாப்பையும் பொது அமைதியையும் நிலைநாட்டிட வேண்டும் என தூத்துக்குடி "முத்துகுளித்துறை பரதர் நலச் சங்கம்" சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வாயிலாக தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். என்று அதன் பொதுச்செயலாளர் கனகராஜ்  தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு, அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.