தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் “என் வாக்குச்சாவடி… வெற்றி வாக்குச்சாவடி” என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி 34-வது வார்டு, 42-வது பாகத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது அவர், வார்டுக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் முழுமையாக இடம் பெற வேண்டும் என்றும், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், நடைபெறும் சேர்க்கை முகாம்கள் மூலம் அனைவரையும் சேர்த்திட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.


ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “தமிழக முதலமைச்சரின் கரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்த வேண்டும். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய பொதுமக்களை நேரில் சந்தித்து, திமுக அரசு செய்துள்ள சாதனைகளை முழுமையாக எடுத்துச் சொல்ல வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டார்.


மேலும் அவர் பேசுகையில்,
விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டு, தகுதியான அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாகவும், கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் – ஒன்று அரசு சார்பிலும், மற்றொன்று தனியார் சார்பிலும் அமைக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் பெருமளவு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார். அதேபோல், வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை, ஃபர்னிச்சர் பார்க், கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் ஆகியவை தூத்துக்குடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


“அதிமுக ஆட்சியில் நடைபெறாத வளர்ச்சி பணிகள், திமுக ஆட்சியில் மாநகராட்சி முழுவதும் நிறைவேற்றப்பட்டுள்ளன. களத்திற்கே வராத பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்,” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
அடுத்த 20 நாட்கள் முழுமையாக வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, எஸ்ஐஆர் பட்டியல் அடிப்படையில் வாக்காளர் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இந்த ஆய்வுக் கூட்டத்தில்,
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் சுரேஷ், கவுன்சிலர் ராமர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், அவைத்தலைவர் ஆனந்தன், வட்ட துணைச் செயலாளர்கள் அன்னலட்சுமி, மாரிமுத்து, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், தாமரைலிங்கம், ஜெயராமன் மற்றும் மணி உள்ளிட்ட பாக முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.