தமிழகத்தில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை தவிர்த்து யாராலும் அரசியல் செய்ய முடியாது என பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என். இசக்கிராஜா தேவா் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என். இசக்கிராஜா தேவா், தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார்.
அவருக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராசுதேவா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய இசக்கிராஜா தேவா், “வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க முயற்சி செய்து வருகின்றன. நாமும் அந்த பாதையில் பயணித்தாலும், நம் சமுதாய மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
நம் சமுதாயத்திற்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால், வரவிருக்கும் தேர்தலில் நம் பலத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஜனநாயகத்தை காக்க, மக்கள் பிரதிநிதியாக நம்மில் ஒருவராவது சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும். அந்த உரிமைக்குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் போது தான் நமக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கும்,” எனத் தெரிவித்தார்.
மேலும், “உங்களை நம்பித்தான் நான் அரசியல் களத்தில் நிற்கிறேன். அனைவரின் வாழ்க்கையிலும் எதிர்காலம் நிச்சயம் உருவாகும். அதற்கேற்ற வகையில், என்னுடைய பணிகள் மூலம் எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன்,” என்றும் அவர் பேசினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.