நாட்டில் பெண் சிசுக்கொலை மற்றும் பாலின பாகுபாட்டை ஒழித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

நாட்டில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்து  அதிகாரம் உள்ளவர்களாக மாற்றும் வகையில் மத்திய அரசு பெண் குழந்தைகளை பாதுகாப்போம்  பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் என்ற ஒரு முழக்கத்தை மேற்கொண்டு வருகிறது.  

பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்து பாலின பாகுபாட்டை தடுக்க தமிழக அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக அரசோடு இணைந்து தூத்துக்குடி ஜே.சி.ஐ குயின் பீஸ் என்ற பெண்கள் அமைப்பு தூத்துக்குடி மாநகரில் கலர் ஓவியங்கள் மூலமாக பெண் குழந்தைகள் பாதுகாப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தை தொடங்கினர்.

தூத்துக்குடி பகுதியில் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை  குயின் பீஸ் தலைவர் அஜிதா பிரபு தலைமையில், ஜே.சி.ஐ மண்டல துணைத் தலைவர் பால் நாயகம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். குழந்தைகள் பாதுகாப்பு தூத்துக்குடி மாவட்ட அலுவலர் அனுசியா தொடங்கி வைத்தார். இதில் திருச்சிலுவை மகளிர் கல்லூரி மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர். தொடர்ந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா கூறும்போது தமிழகத்தில் பெண்களை பாதுகாப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழிகாட்டுதலில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்ற. பெண் குழந்தைகளை பாதுகாப்பதுடன் அவர்களுக்கு கல்வி அளிப்பது அவசியம், எனவே கல்வி அறிவு பெறுவதற்கு நிதி பற்றாக்குறையாக இருக்கக் கூடாது என்பதற்காக புதுமைப்பெண் திட்டம் சமூக நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. பெண் குழந்தைகள் படித்து முன்னேற்றம் அடைவதன் மூலமாக சுதந்திரமாக தனித்துவமான முறையில் செயல்பட முடியும் என்பதற்காக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகளை சுமையாக கருதுவது குறைந்துள்ளது. மேலும் பெண் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தேசிய பெண்கள் அமைப்பைச் சார்ந்த சுபாஷினி வில்சன், ஜெர்லின், ஆயிஷா பர்வீன், ஜோஸ்பின் பிரபா, திருச்சிலுவை  மகளிர் கல்லூரி பேராசிரியை மதுரவல்லி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்