தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் இசிதோர் பெர்ணான்டோ அவர்கள், கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுமையான மெகா கிறிஸ்துமஸ் குடில்களை அமைத்து வருகிறார்.
அந்த வரிசையில் இந்த ஆண்டும் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள யேசு பாலன் குடில், பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு அமைக்கப்பட்ட குடில், “இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; விலங்குகள், பறவைகள், மரங்கள், கடல் வாழ் உயிரினங்கள், சிறு பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது” என்ற ஆழமான கருத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் இறைவனின் படைப்பில் சமம் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து உயிர்களும் யேசு பாலனை தரிசிக்க வந்ததாகக் கற்பனை செய்து குடில் அமைக்கப்பட்டுள்ளது. மனிதன் மையமாக அல்லாது, இயற்கையும் உயிரினங்களும் மையமாக அமைக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு குடில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரின சமத்துவம் மற்றும் மனிதனின் பொறுப்பு குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் மத்தியில் இந்த குடில் பெரும் பாராட்டை பெற்றுள்ளதுடன், சமூகத்திற்கு ஒரு முக்கியமான செய்தியையும் எடுத்துச் செல்கிறது. இசிதோர் பெர்ணான்டோ அவர்களின் இந்த முயற்சி, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களிடையே இயற்கை மீதான அக்கறையையும், அனைத்து உயிர்களையும் சமமாக மதிக்க வேண்டிய அவசியத்தையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.