தூத்துக்குடி மாநகரில் சுற்றுப்புற சூழலை பாதுகாத்து, மாசு இல்லாத பசுமைத் தமிழகம் உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஆல்கன் டிரஸ்ட் சார்பில் தொடர் மரம் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் 397வது வார மரம் நடும் நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் சிறப்பு விழாவாக பிரையன்ட் நகர் வள்ளிநாயகபுரம் அடுத்துள்ள எஸ்.ஆர்.நகர் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் இணைந்து தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். பசுமை வளர்ப்பின் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெபராஜ், கவுன்சிலர் சரவணக்குமார், மாவட்ட திமுக பிரதிநிதி நாராயணன், வட்டச் செயலாளர் ரவீந்திரன், வணிக அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், மதன் டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் விழாவை பசுமைச் செய்தியுடன் இணைத்த இந்த மரம் நடும் நிகழ்ச்சி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.