தூத்துக்குடி மாநகராட்சியின் பொதுமக்கள் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதியிலான மாநகராட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, வாரம் ஒருமுறை புதன்கிழமைகளில் மண்டல வாரியாக குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ரியங்காவும் முன்னிலை வகித்தார்.
“மனுக்கள் வந்தால் உடனடி தீர்வு… மக்களிடம் நல்ல வரவேற்பு!”
முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, “முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, பல மாதங்களாக சுழற்சி முறையில் நடைபெறும் இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் அளிக்கும் ஆதரவு பெரிது,” என்றார். பிறப்பு, இறப்பு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற மனுக்கள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன. புதிய குடிநீர் இணைப்புகளுக்கும் உடனடி ஆணைகள் வழங்கப்படுகின்றன என தெரிவித்தார்.
இதுவரை இந்த மண்டலத்தில் 938 மனுக்கள் வந்ததில், 930 மனுக்கள் தீர்வு பெற்றுள்ளன. 16, 17, 18-ஆம் வார்டுகளில் பாதாள சாக்கடைப் பணிகள் மழைகால தாமதத்துக்குப் பிறகு விரைவில் முடிக்கப்பட உள்ளன. மேலும் 100-க்கும் மேற்பட்ட சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடங்கவிருக்கிறது.
பக்கிள் ஓடை விரிவாக்கம் – பொதுமக்களுக்கு பாதுகாப்பு!
பக்கிள் ஓடையில் வெள்ளநீர் செல்லும் வழிகள் மேம்படுத்தப்பட்டதால் மழைபாதிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது கூடுதலாக 7 கி.மீ. நீளத்தில் ஓடை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 16 வழித்தடங்கள் மூலம் மழைநீர் கடலுக்குச் செல்கிறது என்பதை மேயர் விளக்கினார்.
பூங்கா மேம்பாடுகள் – மக்கள் நலனுக்கான நவீன வசதிகள்
ராஜாஜி பூங்கா, ரோஸ் பூங்கா போன்ற இடங்கள் பொங்கல் திருநாளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது நடைப்பயிற்சி பாதை விரிவாக்கம் செய்யப்பட்டதுடன்,
திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்
எம்ஜிஆர் பூங்கா ஜிம்
பெண்களுக்கான மகளிர் பூங்காவில் உள்ள ஜிம் போன்ற வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
கழிவுநீர் மேலாண்மை – மூடப்பட்ட கால்வாய்கள் மூலம் கொசு தொல்லை குறைப்பு
புதியதாக அமைக்கப்படும் கால்வாய்கள் அனைத்தும் மூடப்பட்டதாக இருக்கும். இது பொதுமக்களுக்கு பாதுகாப்பும் வசதியும் அளிக்கும். சண்முகபுரம் 31, 32-ஆம் வார்டுகளில் மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. தருவைகுளத்தில் தினசரி 28 எம்டி கழிவுநீர் செல்கிறது; அதை சுத்திகரித்து பல தொழிற்சாலைகளுக்கு வழங்கும் திட்டமும் தயாராக உள்ளது.
“குப்பைகளை தரம் பிரித்து வழங்குங்கள்” – மேயர் வேண்டுகோள்
பொதுமக்கள் குப்பைகளை வீட்டிலேயே பிரித்து வழங்க வேண்டும் என மேயர் கேட்டுக் கொண்டார். இது நகரின் சுத்தத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியமானது என்றார்.
தெப்பக்குளம் குறித்து – “பழமை பேணப்பட்டே சீரமைப்பு”
தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்ததால், பொதுமக்களின் கோரிக்கையின்படி நீர் அகற்றப்பட்டு சீரமைப்பு தொடங்கியது. மழைநீர் செல்லும் பைப் லைனில் காற்று நுழைந்ததால் நடைபாதையில் ஏற்பட்ட சேதம் விரைவில் சரிசெய்யப்படும் எனவும் “பொதுமக்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம்; தெப்பக்குளம் பழமை கெடாமல் அப்படியே சீரமைக்கப்படும்,” என மேயர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
மண்டல தலைவர் அன்னலெட்சுமி, நகரமைப்பு உதவி செயற்பொறியாளர் காந்திமதி, சுகாதார அலுவலர் சாரோஜா, உதவி பொறியாளர்கள் ராகவி, காளிதாஸ், லெலின், குழாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் கனகராஜ், கந்தசாமி, ஜான், விஜயலட்சுமி, பொன்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.